டெல்லியில் ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் போலீசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி ஜாமியா மில்லியா கல்லூரி அருகில் இருந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியபோது திடீரென அங்கு தோன்றிய ஒரு நபர் மாணவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார்
இந்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே, பிப்ரவரி 1ம் தேதி அதே டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 49வது நாளாக சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்திவரும் தொடர் தர்ணா போராட்டத் தலத்துக்கு அருகே மீண்டும் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தது போலீஸ். அவரது பெயர் கபில் குஜ்ஜர் என்பது பிறகு தெரியவந்தது.
இன்று செவ்வாய்க்கிழமை இது குறித்துப் பேசிய டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தேவ், "எங்கள் தொடக்க நிலை புலன் விசாரணையில் கபில் குஜ்ஜரின் கைபேசியில் கண்டெடுத்த சில புகைப்படங்கள், மற்றும் அவரே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவரும் அவரது தந்தையும் ஓராண்டுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.